நடிப்பின் பல்கலைக்கழகம்.. 3 தலைமுறை ரசிகர்களை தனது திறமையால் கட்டிப் போட்டிருந்த ஆச்சி மனோரமாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று
நகைச்சுவை, குணச்சித்திரம், என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது அசாத்திய நடிப்பால் அதற்கு உயிர் கொடுத்து, 3 தலைமுறை ரசிகர்களை தனது திறமையால் கட்டிப் போட்டிருந்தவர் ஆச்சி மனோரமா…அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று...
ஆச்சி மனோரமாவை “ பெண் சிவாஜி” எனக் குறிப்பிட்டு இருப்பார் மறைந்த பத்திரிக்கையாளர் சோ…. சிவாஜியைப் போலவே ஏ.பி.நாகராஜன் இயக்கிய 'கண்காட்சி' படத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்தார் மனோரமா. 1958 ஆம் ஆண்டு தொடங்கி தாம் இறக்கும்வரை மனோரமா நடித்து கொண்டுதான் இருந்தார். ஆயிரத்து 500 படங்களைக் கடந்து நடித்து பத்மஸ்ரீ முதற்கொண்டு பல தேசிய விருதுகளையும் வாங்கிக் குவித்தவர் ஆச்சி மனோரமா.
கோடிக்கணக்கான மக்களை தன் நடிப்பால் சிரிக்க வைத்த, சிந்திக்க வைத்த, அழ வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை என்னவோ கடைசிவரை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. சிறு வயதிலேயே தந்தையால் கைவிடப்பட்டு, தாயின் அரவணைப்பில் வறுமையோடு போராடி, பள்ளிக்கூடம் சென்று படிக்க வழியில்லாமல் 12 வயதில் நாடகத்தில் நடிக்க வந்தவர் ஆச்சி மனோரமா.
ஆச்சியின் திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்துபோனது. கணவர் ராமநாதனும் ஆச்சியை பாதியில் கைவிட்டு வேறு திருமணம் செய்து கொண்ட நிலையில் மகன் பூபதிக்காக மட்டுமே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் மனோரமா. தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி - பத்மினிக்குச் சற்றும் குறைவில்லாத கதாபாத்திரமாக 'ஜில் ஜில் ரமாமணி' என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டைப் பெற்றார் மனோரமா.
பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் கண்ணத்தாவாக வயிறு குலுங்க சிரிக்கவைத்தவர் மனோரமா.
கங்காபாய் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் மதனகாமராஜன், தாயம்மாவாக கிச்சுகிச்சு மூட்டிய சிங்காரவேலன், சின்னத்தம்பி படத்தில் பிரபுவின் கைம்பெண் தாயாக கதங்கடித்த கதாபாத்திரம், அனுஷ்காவின் பாட்டியாக தோன்றிய சிங்கம், சிங்கம் 2 என எண்ணற்ற திரைப்படங்களில் மனோரமாவின் கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகின்றன.
அறிஞர் அண்ணா, மு.கருணாநிதியுடன் மேடைகளிலும் எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்.
பத்மஸ்ரீ , கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, டத்தோ சாமிவேல் சரித்திர நாயகி விருது, கலா சாகர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
நடிப்பின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் மனோரமா என்றால் அது மிகையாகாது.
Comments