விவசாயிகள் மீது காரை ஏற்றி 8 பேர் பலியான விவகாரம்.. மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா கைது
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் கடந்த ஞாயிற்றுகிழமை விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் கூட்டத்தில் மோதியது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாயினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 பேர் மட்டும் கடந்த வியாழன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடுமை காட்டியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்மிஸ்ராவுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரான அசிஷ் மிஸ்ராவிடம் போலீசார் இரவு 11 மணி வரை சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பும் அளிக்காததால் அசிஷ் மிஸ்ராவை கைது செய்துள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார். பின்னர் நீதிபதி முன், ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments