முந்திரி ஆலை தொழிலாளி கொலை... 5 பேர் கைது - கடலூர் எம்.பி தலைமறைவு?
கடலூரில் எம்பி ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல் எதிரியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எம்பி ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பணிக்கன் குப்பத்தில் எம்.பி., டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை இயங்கி வருகிறது. கடந்த மாதம் 19-ந் தேதி அங்கு வேலைக்கு சென்ற மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து மர்ம மரணம் என காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், எம்.பி.யும், அவரது ஆட்களும் அடித்துக் கொலை செய்ததாக கோவிந்தராஜ் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, சென்னை நீதிமன்ற உத்தரவின்படி கோவிந்தராஜ் உடலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
அத்துடன் கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில், தனது தந்தை கோவிந்தராஜுவை எம்.பி.யின் ஆட்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் பொய் வழக்கு பதிவு செய்வதற்காக ரத்தக் காயங்களுடன் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார். மேலும், அங்கிருந்த போலீசார் தனது தந்தையை புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் எம்.பி.யின் ஆட்களுடனேயே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட முந்திரி தொழிற்சாலை மற்றும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தியதில், கோவிந்தராஜை காவல் நிலையம் அழைத்து வந்த சிசிடிவி காட்சிகளும், போலீசார் அவரை எடுத்த புகைப்படமும் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் எம்.பி. ரமேஷ் அவரது மேலாளர் கந்தவேல், உதவியாளர் நடராஜன் மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய 3 பேர் என மொத்தமாக 6 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. கொலை, கூட்டுச் சதி, சதி திட்டம் தீட்டுதல், தடயங்களை மறைப்பது, கூட்டாக சேர்ந்து தாக்குவது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி. ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், மற்ற 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, எம்.பி.யின் உதவியாளர் நடராஜன் கைதுக்கு பிறகு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Comments