லோடு வேனை சாய்த்து பார்த்த ஒற்றை யானையார்..! ஹார்ன் அடித்து விரட்டினர்

0 2943
லோடு வேனை சாய்த்து பார்த்த ஒற்றை யானையார்..! ஹார்ன் அடித்து விரட்டினர்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை, சரக்கு லாரியை கவிழ்க்க முயற்சித்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.

அந்தவகையில் வெள்ளிக்கிழமை மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. யானை சாலையில் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் நிறுத்தி காத்திருந்தனர். இதன் காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

அப்போது திடீரென ஆவேசமடைந்த அந்த ஒற்றை யானை, அங்கு வாழைக்காய் லோடு ஏற்றி நின்றிருந்த சரக்கு லாரியை சுற்றிவந்து அசைத்து கவிழ்க்க முயற்சித்தது. அச்சம் அடைந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதன் காரணமாக மற்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர்.

பின்னால் நின்றிருந்த லாரி ஓட்டுனர் ஹாரன் ஒலி எழுப்பி யானையை துரத்த முயற்சித்தும் பலனில்லை. பின்னர் அங்கிருந்து வேகமாக ஓடிய ஒற்றை யானை மற்ற வாகனங்களை துரத்தியது.

சோதனை சாவடி போலீசார், வனத்துறையினர் துரத்த முயற்சித்தும் யானை செல்லவில்லை. சுமார் அரை மணி நேரம் ஆக்ரோஷமாக சாலையில் நடமாடிய ஒற்றையானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

பகல் நேரங்களில் காட்டுயானைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments