கல்லானாலும் திருச்செந்தூரில் பெயர்த்துடுவேன்...! இவர் தாண்டா ஒப்பந்ததாரர்

0 30682

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபாதை கற்கள் பதித்த ஒப்பந்ததாரருக்கு பாக்கித்தொகையை கொடுக்காமல் 2 வருடம் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக கற்களை பெயர்த்து எடுத்து பாக்கி தொகையை வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.... என்று டி.எம்.எஸ் மனமுருகி பாடிய திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தான் கல்லுக்கு மல்லுகட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆறுமுகநேரியைச் சேர்ந்த சண்முகம் என்ற ஒப்பந்ததாரர், கோவில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது இன்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகங்களில் பல்வேறு பகுதிகளில் 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடைபாதை சிமெண்ட் கற்களை ஒப்பந்த அடிப்படையில் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்தபணிக்காக 3 லட்சத்து 65 ஆயிரம் தொகையினை திருக்கோயில் பொறியாளர் மூலம் சண்முகம் பெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் மீதமுள்ள தொகையினை பொறியாளர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு தர வேண்டிய பணத்தை கோவில் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டதாக கூறிய ஒப்பந்தக்காரர்  சண்முகம், தனது பணியாளர்களை கொண்டு வந்து திருக்கோயில் இராஜகோபுரம் பகுதியில் பதித்து கொடுத்த கற்களை பெயர்த்து அகற்றும் பணியில்  ஈடுபட்டார். 

இது குறித்து தகவலறிந்த திருக்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டோரை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தான் கடன் வாங்கி ஒப்பந்த பணி மேற்கொண்டதாகவும், கொரோனா காலத்திலும் தன்னிடம் வங்கிகள் கெடுபிடி காட்டியதாகவும் ஆனால் தனக்கு தர வேண்டிய பாக்கித்தொகையை தராமல் கோவில் அதிகாரிகள் அலைகழித்ததாக சண்முகம் குற்றஞ்சாட்டினார்.

அதிகாரிகள் கல்லுக்கு பணம் கொடுக்க மேலும் கால அவகாசம் கேட்ட நிலையில் , ஒப்பந்ததாரர் சண்முகம் தான் பதித்த கல்லை பெயர்த்து எடுப்பதில் முனைப்பு காட்டியதால் அதிகாரிகள் விழிபிதுங்கி போயினர்.

இதையடுத்து திருக்கோயில் பொறியாளர் பாக்கித் தொகைக்கு உரிய பணத்திற்கான காசோலையினை ஒப்பந்ததாரரிடம் வழங்கியதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து அகற்றிய கற்களை அதே இடத்தில் வைத்து விட்டு சண்முகம் தனது பணியாளர்களுடன் அங்கிருந்து  சென்றார். 

ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய தொகையில் 20 சதவீதத்தை அதிகாரிகள் கமிஷனாக ஆட்டையை போட நினைத்து அமுக்கிய நிலையில் சண்முகம் தனது சாதுரியமான நடவடிக்கையால் பணத்தை திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

அசுரரை வென்ற இடத்தில் அர்ச்சகர்களுக்கு இணையாக கோவில் அதிகாரிகளும் அட்டகாசம் செய்து வந்தது கல்லுக்கு மல்லுகட்டிய கமிஷன் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments