மருத்துவமனையில் தாயுடன் பழகி, பச்சிளங் குழந்தை திருட்டு: கட்டை பையில் கடத்திச் சென்ற பெண்

0 3511

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெண் ஒருவர் கட்டை பையில் வைத்து கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த குணசேகரன் மனைவி ராஜலட்சுமிக்கு ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடி வார்டில், ஒரு பெண், என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என கூறி உதவி செய்வது போல் நடித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவருடனே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண், ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் குழந்தையை பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜலட்சுமியும், குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது அந்த பெண்ணையையும், குழந்தையையும் காணாததால் அருகில் தேடியுள்ளார்.

மருத்துவமனையில் எங்குமே காணாத நிலையில், கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோதும் யாருக்கும்  தகவல் எதுவும் தெரியவில்லை. புகாரின்பேரில், துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, அந்த பெண் கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

தாயுடன் பழகுவது போல நடித்து, பச்சிளங் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்த பெண் பற்றிய அடையாளங்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments