21 ஏக்கர் கோவில் நிலத்தில் குயினுக்கு பூங்கா கட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

0 10993

சென்னை பூந்தமல்லி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்காவை 4 வாரத்தில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரமாண்ட ஏரியுடன் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வளைத்துபோட்ட 21 ஏக்கர் கோவில் நிலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை பூந்தமல்லி அருகே முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜுக்கு சொந்தமான குயின்ஸ் லேண்ட் பூங்கா மற்றும் ரிசார்ட் இயங்கி வருகின்றது. அவரது மறைவிற்கு பின்னர், அவரது மகனும் தற்போதைய ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஊர்வசி அமிர்தராஜ் அதனை நிர்வகித்து வரும் நிலையில் , அந்த பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலத்தில் 21 ஏக்கர் நிலம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும் அதனை குத்தகைக்கு எடுத்த ராஜம்ஹோட்டல்ஸ் நிறுவனம், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு ரிசார்ட் போன்றவற்றை நடத்தி வருகிறது.

கடந்த 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், கோவில் நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து, 2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 ரூபாயை குத்தகை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் மூலம் கடந்த 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து குயின்ஸ்லேண்ட்டை நிர்வகிக்கும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1995 ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் ஊர்வசி செல்வராஜுக்கு, குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 1998ல் குத்தகை காலம் முடிந்த பிறகும் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்திருந்ததாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களில் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 08 லட்சம் ரூபாயையும், கோவிலுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த பொழுது போக்கு பூங்காவிலே பிரமாண்ட ஏரி ஒன்று உள்ளது அதற்கு மேல் கம்பிகள் அமைத்து வின்ச் பயணமும், ஏரிக்குள் படகு பயணமும் விட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தனர் . அப்போது ஏரியில் படகு விபத்தில் சிக்கி ஒருவர் பலியானபோது படகுப் பயணத்துக்கு வருவாய்துறை அனுமதி மறுக்கப்பட்டது. ராட்சத ஜெயண்ட் வீல் அறுந்து விழுந்த விபத்து என குயின்ஸ் லேண்டை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையிலும் தற்போது 21 ஏக்கர் கோவில் நிலத்தை அபகரிக்கமுயன்று நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments