ஒரு ஜோடி செருப்பு ரூ 5 லட்சமாம்ப்பா..! ஸ்னாப்டீல் பெயரில் மோசடிகள்..!
சென்னையில் 18 லட்ச ரூபாய் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ஐந்தரை லட்ச ரூபாயை பரித்த சைபர் மோசடி கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சிலதினங்களுக்கு முன் ஆன்லைனில் ஸ்னாப்டீல் (Snapdeal) மற்றும் ஷாப் க்ளூஸ் (shop clues)என்ற ஆன்லைன் விற்பனை தலங்களில் பொருட்களை வாங்குவதற்காக, முகவரி உள்ளிட்ட தகவல்களை கொடுத்து உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் உறுப்பினராக சேர்ந்ததற்காக அவருக்கு, இலவசமாக செருப்பு ஒன்று ஸ்நாப்டீல் இணையதளத்தில் இருந்து வினோத் வீட்டிற்கு பரிசுப்பொருளாக அனுப்பியுள்ளனர்.
அடுத்த நாளே வினோத்தை ஸ்நாப்டீல் நிறுவனத்தில் இருந்து தொடர்புகொண்டு பேசுவதாக கூறிய ஒரு நபர், 18 லட்ச ரூபாய் பரிசு பணம் விழுந்து இருப்பதாக கூறி, வாட்ஸ் அப்பில் காசோலை அனுப்பியுள்ளனர்.18 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த குறைந்தபட்ச தொகை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்து இருக்க வேண்டும் என கூறி, முதற்கட்டமாக பரிசுத் தொகையில் ஒரு சதவீதம் தொகையான 18 ஆயிரம் அனுப்ப கூறியுள்ளனர். அதன் படி 5 தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்கைத் துவங்கி, அதை snapdeal நிறுவனத்துடன் இணைக்குமாறு லிங்க் அனுப்பியுள்ளனர். அதன்படி கணக்கை துவங்கிய வினோத் லிங்கில் இணைத்துள்ளார். செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி தொடர்ந்து படிப்படியாக அவர் சேமிப்பில் இருந்த ஐந்தரை லட்சம் ரூபாய் வரை அவரிடமிருந்து பிடிங்கியுள்ளனர்.
மேலும், 55 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் பரிசுப்பொருள் கிடைக்கும் என கூறிய அந்த கும்பலை மேலும் நம்பி நண்பரிடம் கடன் வாங்க முயற்சித்துள்ளார். அவருடைய நண்பர் சிவக்குமாரிடம் நடந்தவற்றை கூறி பணம் கேட்ட போது அவர் வினோத் ஏமாந்து போனதை அறிந்து அவரிடம் விளக்கமாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உடனடியாக இருவரும் அங்குள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
போலீசாரின் முதற்கட்டமாக விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த கும்பல், அங்கு வங்கி கணக்குகள் துவங்கி பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதே போன்று வேறு யாரும் ஏமாந்து விடக் கூடாதே என்ற அடிப்படையிலும், விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வினோத் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து புகார் அளித்த பின்னரும் அந்த மோசடி கும்பல் புகார் அளித்து கொண்டிருக்கும் போதே கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மோசடிக் கும்பலுக்கு தொடர்பு கொண்டு பேசினர். அப்போதும் அவர்கள் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினால் பரிசுத் தொகை அனுப்பப்படும் என கூறி ஏமாற்றி வந்தது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஸ்னாப்டீல், அமேசான் போன்று பிரபல நிறுவனங்களின் பெயரில் இலவசமாக ஒரு பொருளை அனுப்பி, லட்சக்கணக்கில் பரிசு விழுந்ததாக கூறினால் நம்ப வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments