மணல் கடத்துரியோ… மது கடத்துரியோ… மாச மாமூல வெட்டு..! இன்ஸ்சால் இம்சை என புலம்பல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த தூசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் மது கடத்தி வரும் வாகனங்களை பிடிக்காமல் இருக்க, காவல் ஆய்வாளர் மாத மாமூல் வசூலிப்பதால், வாகன சோதனையில் ஏழைகள் மீது மட்டுமே வழக்கு போட முடிவதாக, வேதனையுடன் போலீசார் வெளியிட்டுள்ள ஆடியோ ஆதாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ள அண்ணாத்துரை மீது தான் இந்த மாமூல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தூசி காவல் நிலைய எல்லைக்குள் ஏராளமான கல்குவாரிகள் இரவு பகலாக இயங்கி வருவதாகவும், இங்கிருந்து விதியை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக அதிக லோடு ஏற்றி செல்லும் கல்குவாரி லாரிகள், மணல் மற்றும் மது கடத்தும் லாரிகளையும் வாகன சோதனையில் மறித்தால் போதும், லாரி உரிமையாளர்கள் மாதம் மாதம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரைக்கு மாமூல் கொடுப்பதாக கூறி தப்பிச்செல்வதாக வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதையும் மீறி வாகன சோதனை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட லாரிகள் மீது வழக்கு போட்டால், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை அழைத்து சாலையில் நிற்க வைத்து சத்தம் போட்டு, லாரிகளை விடுவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காவலர் சன்னிலாய்டு என்பவர், அது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
வாகன சோதனையில் தவறு செய்பவர்களை விட்டுவிட்டு ஏழைகள் மீது மட்டும் தான் வழக்கு போடுவதால், தங்களுக்கு போலீஸ் வேலைபார்ப்பதற்கு வெட்கமாக இருப்பதாகவும், அதனால் போலீஸ் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்ல போவதாகவும் அந்த காவலர் ஆதங்கத்துடன் பேசும் ஆடியோவும் வெளியாகி உள்ளது.
மாமூல் பணத்தை காவல் ஆய்வாளரிடம் உள்ள இரு ஓட்டுனர்கள் மூலமாக கொடுப்பதாக லாரி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாமூல் குற்றச்சாட்டு குறித்து காவல் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, தன் மீது குற்றஞ்சாட்டியுள்ள காவலர் சன்னிலாய்டு ஏற்கனவே சென்னையில் ஆந்திர நகைவியாபாரியிடம் தங்க கட்டியை பறித்துக் கொண்டு விரட்டிய வழிப்பறி வழக்கில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்டவர் என்றும், தற்போது தனது காவல் நிலையத்தில் அவரால் தவறு செய்ய இயலாத ஆத்திரத்தில் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருவதாகவும், யாரிடமாவது லஞ்சம் பெற்ற ஆதாரம் இருந்தால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் காவலர் சன்னிலாய்டு ஆகிய இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடத்தினால் மாமூல் வாழ்க்கையின் உண்மை முகம் அம்பலமாகும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு....
Comments