மதுவை ஊசி மூலம் ஏற்றினால் ஆள் காலி.. போதை இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
மண்ணின் மைந்தன் திரைப்படத்தில், வடிவேலு மதுவை ஊசி வழியாக உடலில் செலுத்துவது போல, 23-வயது இளைஞர் ஒருவர் செய்த விபரீத முயற்சி உயிரை வாங்கியுள்ளது. மதுவை அருந்தினால்தான் ஜாலி, கையின் வழியாக ஊசி மூலம் ஏற்றினால் ஆள் காலி என்ற திரைப்பட வசனத்தை உண்மையாக்கிய இந்த சோக சம்பவம் ஈரோடு அருகே நிகழ்ந்துள்ளது.
நகைச்சுவைக்காக திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி நிஜத்தில் அரங்கேறிய ஊர், ஈரோடு அருகே உள்ள பெரியசேமூர் கல்லாங்கரடு. அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற போது வலது தோள்பட்டை இறங்கி, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததோடு மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
தோள்பட்டை வலியைப் போக்குவதாக எண்ணி, தவறான நண்பர்களின் ஆலோசனையால் போதைப் பொருட்களுக்கும் அடிமையான இளைஞர் நாகராஜ், வலி நிவாரணி மருந்துகளை ஊசியின் மூலமாக உடலில் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி அளவு கடந்த போதையில் இருந்த நாகராஜ், மதுவை ஊசியின் மூலமாக உடலில் செலுத்தியுள்ளார்.
பின்னர் மயக்கமடைந்து கிடந்த நாகராஜை பெற்றோர்கள் பார்த்து, சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
தோள்பட்டை இறக்கத்திற்கு உரிய சிகிச்சை பெறாமல், போதைக்கு அடிமையாகி, மிதமிஞ்சிய குடிவெறியில் மதுவை ஊசி வழியாக உடலில் ஏற்றியது இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிக்க வேண்டிய வயதில், குடியின் சகவாசத்தால் தனது மகன் உயிரிழந்ததை பார்த்தாவது போதையின் பக்கம் செல்லும் இளைஞர்கள் பாதை மாறவேண்டும் என நாகராஜின் பெற்றோர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments