நள்ளிரவில் உயிர் போராட்டம்.. தாயைக் காப்பாற்ற கதறிய மகன்.. மருத்துவர்கள் இல்லையென புகார்..! கொரோனா நோயாளி பலி

0 6777

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியான தனது தாய் உயிரிழந்ததாக கூறி ஒருவர் வெளியிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தாய் மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருக்க அதற்கு காரணம் மருத்துவர் தான் என அந்த இளைஞர் வீடியோவில் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.  

சிதம்பரத்தை சேர்ந்த கோதண்டராமன் மற்றும் அவரது மனைவி செந்தாமரைச் செல்வி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24ம் தேதி முதல் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த ஒன்றாம் தேதி சிகிச்சை பலனின்றி கோதண்டராமன் உயிரிழந்தார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மருத்துவமனையில் செந்தாமரைச் செல்விக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் பணியிலிருந்த மருத்துவரை அழைத்து வர சென்றதாகவும், ஆனால் அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த செந்தாமரைச் செல்வியின் மகன் சீனிவாசன் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அரைமணி நேரமாக மருத்துவர் யாரும் வரவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில் செந்தாமரைச் செல்வியின் நெஞ்சில் கையை வைத்து சுவாசத்தை மீட்க அவரது மகள் அழுத்தம் கொடுத்தபடி இருந்தார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது தாய் உயிரிழந்ததாக அவரது மகன் சீனிவாசன் குற்றசாட்டினார்.

பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தாமரைச் செல்வியின் உறவினர்கள் வலியுறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்க தொடர்பு கொண்ட போது, யாரும் அழைப்பை ஏற்க முன்வரவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments