ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. சில இடங்களில் குளறுபடிகள், பல இடங்களில் பிரச்சனைகள்.. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் குளறுபடிகள், பிரச்சனைகள் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 92ஆவது வாக்குச்சாவடியில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. சிப்காட் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், ஜன்னல் வழியாக வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் சின்னத்தை சைகையாக காட்டியதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதால் அந்த வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவியது. பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவு சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. த.லட்சுமி என்பதற்கு பதிலாக தனலட்சுமி என குறிப்பிடப்பட்டிருந்ததால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அத்தோடு, முகவர்கள் இல்லாமலேயே 7 வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், வாக்குப்பதிவு 3 மணிநேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வாக்குப்பதிவை மீண்டும் நடத்த செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட திரிசூலம் ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்குச் சீட்டு இல்லாததால் காலை 9 மணியில் இருந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
காலையில் வாக்குச்சாவடிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குசீட்டுகள் 50 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியதும் தீர்ந்து போனது. பின்னர், வாக்குச்சீட்டு கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதற்கிடையே வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் வாக்குவாதம் செய்தனர்.
Comments