ஜோக்கர் முகமூடி அணிந்து ஏ.டி.எம். மையத்திற்குள் கொள்ளை முயற்சி... தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் நள்ளிரவில் ஜோக்கர் முகமூடி அணிந்து, குடைபிடித்தவாறு வந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டிங் மிஷின் வைத்து உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தூத்தூர் கலை கல்லூரி அருகே செயல்பட்டு வரும் ESAF வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
கொள்ளையர்களின் முயற்சி தோல்வியடைந்ததால், ஏடிஎம்மில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 75 ஆயிரம் ருபாய் பணம் தப்பியது. தகவல் அறிந்து வந்து அக்கம்பக்கத்தில் வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், கொள்ளையர்கள் இருவரும் ஏ.டி.எம். மையம் இருக்கும் 500 மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, குடையால் முகத்தை மறைத்தபடி வந்து, அருகிலிருக்கும் உணவகத்தில் பதுங்கியிருந்து ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த பின்னர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கட்டிங் மிஷின்களையும் அங்கிருந்த இரும்புக் கடையில் இருந்து திருடி எடுத்து வந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Comments