புலி சுட்டுக் கொல்லப்படாது.. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏற்பாடு..!
நீலகிரி மாவட்டம் மசினகுடி - சிங்காரா பகுதியில், 9-வது நாளாக ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை பிடிக்க தனிப் பயிற்சி பெற்ற வீரர்கள் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் போஸ்பரா வனப்பகுதியில் உலா வந்த, டி23 எனப்பெயரிடப்பட்டுள்ள 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி, வயது முதிர்வு காரணமாக தனது வேட்டையாடும் திறனை இழந்துள்ளது. கடந்த ஓராண்டாக, வாழ்விடத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதி அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி கொல்லத் தொடங்கியது.
40க்கும் மேற்பட்ட கால்நடைகள், நான்கு மனிதர்களைக் கொன்று மக்களை அச்சுறுத்தும் ஆட்கொல்லி புலியாக மாறியுள்ளது. இந்நிலையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ் நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறையினர், 20க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், ஆறு மருத்துவ குழுவினர் 9-வது நாளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மசினகுடியை அடுத்த சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர், அது பதுங்கியுள்ள இடத்தை குறிப்பாக கண்டறிய மோப்ப நாய் அதவை களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று இடங்களில் மரத்தின்மீது பரண் அமைத்து, கால்நடைகளை அப்பகுதியில் கட்டிவைத்தும் புலி நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ட்ரோன் கேமிரா பயன்படுத்தியும் புலி பதுங்கியுள்ள இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப உத்திகளை கையாண்டு புலியை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அப்பகுதியிலிருந்து புலி வேறு பகுதிக்கு தப்பி செல்வதை தடுப்பதை கண்காணிக்க கோவையிலிருந்து தனி பயிற்சி பெற்ற நான்கு உயரடுக்கு எலைட் படையினர் மசினகுடி வந்துள்ளனர்.
சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்கொல்லி T23 புலியை பிடிக்கும் பணியில் 9-வது நாளாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஆட்கொல்லி புலி, மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கப்படும் என்றும் சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்றும் தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர்கள் காட்டுக்குள் செல்லவுள்ளனர். இதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை மீது அமர்ந்து கால்நடை மருத்துவர்கள் காட்டுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments