இது கல்லூரியா ?காதலர் பூங்காவா ? தேவை புதர் ஒழிப்பு வாரியம்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படும் பல ஏக்கர் நிலத்தை சீரமைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் 7 ஆயிரம் மாணவ மாணவிகள் பயில்கின்றனர். மாணவிகளை அதிகமாக கொண்டுள்ள இந்த கல்லூரியில் காலை, மாலை என சுழற்சி முறையில் இரண்டு ஷிப்டாக கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து பட்டம் பெற பேருதவியாக இயங்கி வரும் இந்த கல்லூரிக்கு சொந்தமான 57 ஏக்கரில் கல்லூரி கட்டிடங்கள் தவிர்த்து 35 ஏக்கர் நிலப்பரப்பு சுற்றுசுவர் இல்லாமலும், பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டியும் காணப்படுகின்றது. போதிய பாதுகாப்பு இல்லாததால் இந்த புதர் பகுதிகளை காதல் ஜோடிகள் தங்களின் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
நீண்ட நட்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், கல்லூரி வளாகத்தில் காதல் ஜோடிகள் புதருக்குள் அமர்ந்திருக்கும் வீடியோவை எடுத்து அங்குள்ள சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகின்றது.
இரவு நேரங்களில் இந்த புதர் பகுதிகளை மதுவெறியர்கள் மற்றும் கஞ்சாகுடிக்கிகள் திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து பேசிய அரசு கல்லூரி முதல்வர் கலைவாணி, அந்த வீடியோவில் உள்ளவர்கள் தங்கள் கல்லூரி மாணவர்கள் இல்லை என்றும் கல்லூரி திறந்து கிடப்பதால் வெளியில் இருந்து உள்ளே வருபவர்களை தடுக்க முடியவில்லை என்றும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுசுவரை விரைவாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அசம்பாவிதங்களை தடுக்க உடனடியாக புதர் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து கல்லூரி முழுவதும் செழித்து வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி முழுவதுமாக சுத்தம் செய்வதோடு, அங்காங்கே சிசிடிவி கேமிராக்களை நிறுவி, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதே அங்கு படிக்கும் மாணவ மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.
Comments