டான்ஸ் சாமியாடியின் அருள்வாக்கு கோவிலை இடித்து அகற்ற தீர்மானம்..! மறுத்த பி.டி.ஓவுடன் வாக்குவாதம்..!
திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் கிராமத்தில் மயான நிலத்தையொட்டி கட்டப்பட்டுள்ள அருள்வாக்கு சாமியாரின் கோவிலை இடிப்பதற்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. கூட்டத்தில் தடை போட்ட பி.டி.ஓ வை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களை கவரும் வண்ணம் அவர்கள் வீட்டில் நடக்கின்ற நிகழ்வுகளை அவர்களுக்கே அருள் வாக்காக சொல்லி வந்தவர் சாமியாடி ராஜசேகர் . அண்மையில் இவரது கோவிலை விசேச நாட்களில் திறக்க தடை போட்டு அதிகாரிகள் அதிர வைத்த நிலையில், தற்போது அந்த ஆக்கிரமிப்பு கோவிலை இடிக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தேவதானம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊரில் மயான நிலத்தையொட்டி கட்டப்பட்டுள்ள நிலத்தடி கருப்பசாமி கோவில், பெரிய நாயகி அம்மன் கோவில் மற்றும் தங்கும் அறை, கழிவறை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று கிராம மக்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலாது என்றும் தன்னிடம் முன் கூட்டியே இது குறித்த புகார் மனுவரவில்லை என்றும் கூறி செல்போனில் பேசிய பெண் அதிகாரி ஒருவர் தடை போட்டார்.
ஆனால் அந்த பெண் அதிகாரியிடம் ஊர்மக்கள் சார்பில் மயான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கோவில்கள் குறித்து கடந்த ஆகஸ்டு மாதமே புகார் அளித்துள்ளனர். அதற்கான ஆதாரத்தை சுட்டிக்காட்டிய ஊர் மக்கள், அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒருமனதாக மயான ஆக்கிரமிப்பில் உள்ள அந்த கோவில்களை பொதுமக்கள் முன்னிலையில் இடித்து அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த தீர்மானத்தில் அந்த கோவில்கள் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு இடம் அளவு போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யூடியூப்பை பார்த்து ராஜசேகர் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் கார்களில் வந்து செல்வதால், ஊருக்குள் வீணான பிரச்சனை ஏற்படுவதை தடுக்கவும், மயான நில ஆக்கிரமிப்பு தொடர்வதை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டுவந்தவர்கள் தெரிவித்தனர். இதனை எதிர் கொள்ள சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக சாமியாடி ராஜசேகர் தரப்பில் விளக்கம் அளித்தனர்.
பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால்., அருள் வாக்கு சொன்ன சாமியாடி ராஜசேகர்., தனக்கு வந்திருக்கும் சோதனையை எப்படி சமாளிக்க போகிறார்.? என்பதே அந்த ஊர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments