மனித ரத்த ருசி கண்ட ஆட்கொல்லிப் புலியை வேட்டையாடும் நடவடிக்கை தொடங்கியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆட்கொல்லிப் புலியை வேட்டையாடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, முதுமலை வெளிவட்டத்தில் தேவன் எஸ்டேட், மேப்பீல்டு மற்றும் மசினகுடி பகுதிகளில் டி23 எனப் பெயரிடப்பட்ட ஆட்கொல்லிப் புலியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பேர் உள்ளிட்ட 4 பேரை இதுவரை புலி அடித்துக் கொன்றுள்ளது. ஏராளமான கால்நடைகளையும், நாய் உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளையும் அடித்துக் கொன்றுள்ளது.
புலியை பிடிப்பதற்கு 5 இடங்களில் கூண்டு வைத்தும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதேசமயம், தேவன் எஸ்டேட், மசினகுடி மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக டி23 புலி மாறியது.
மனித ரத்த ருசி கண்ட புலிகளை ஆட்கொல்லிப் புலி என குறிப்பிடுகின்றனர். அத்தகைய புலிகள் நரமாமிசம் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால், புலியை சுட்டுப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, புலியை வேட்டையாட அனுமதி தரப்பட்டு, 70-க்கும் மேற்பட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர். புலியை பிடிப்பதில் தேர்ந்தவர்களான கேரள வனத்துறையை சேர்ந்தவர்களும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புலி வேட்டைக்காக, மசினகுடி - கூடலூர் சாலையில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்கொல்லி புலியை கண்டறிய வனத்துறைக்கு சொந்தமான அதவை என்னும் மோப்பநாய் மசினகுடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. 6 பேர் கொண்ட 3 குழுக்கள், ஆட்கொல்லிப் புலியின் நடமாட்டம், கால்தடம் கண்டறிய வனப்பகுதிக்குள் சென்றது.
இந்நிலையில் மசினகுடி பகுதியில் புலியின் நடமாட்டத்தை உறுதிப்படுத்தி, வனத்துறை வேட்டைக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் புலி சுட்டுப் பிடிக்கப்படவோ அல்லது நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து சுட்டு வீழ்த்தப்படவோ வாய்ப்புள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை புலி தாக்கி உயிரிழந்த மங்கள பசவன் என்பவர் உடலை, வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து இப்போராட்டத்தில் இறங்கிய அவர்கள், புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, புலி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Comments