திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா காலமானார்

0 7139

சேலம் மாவட்ட திமுக முன்னோடிகளில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜா காலமானார். அவருக்கு வயது 58.

தனது பிறந்தநாளுக்கு தந்தை வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு வீரபாண்டி ராஜா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுகவில் முக்கிய நிர்வாகியுமாக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா, 2006 முதல் 2011 வரை வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்த அவர், இன்று காலை தனது பிறந்தநாளை ஒட்டி, புலாவரியிலுள்ள அவரது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்தில்  மரியாதை செலுத்த செல்வதாக இருந்தார். இதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வீரபாண்டி ராஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதனிடையே, வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலத்து சிங்கம் என்று போற்றப்படும் வீரபாண்டியாரின் மகனான வீரபாண்டி ராஜா இனிமையாக பழகி, தன்னுடைய எளிமையான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர், எந்த பொறுப்பையும் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர் என முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் சேலத்துக்கு அரசு விழாவுக்கு சென்றிருந்த போது கூட, வீரபாண்டி ராஜாவை சந்தித்து பேசியதாக நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை என உருக்கமாக கூறியுள்ளார். வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது?, இந்த இழப்பில் இருந்து தன்னை எப்படி தேற்றிக் கொள்வது என தெரியவில்லை என்ற முதலமைச்சர், வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல, தூண் சாய்வது போல என வேதனை தெரிவித்துள்ளார். 

மாரடைப்பால் காலமான வீரபாண்டி ராஜாவின் உடல், பூலாவரியிலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், வீரபாண்டி ராஜா உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் வீரபாண்டி ராஜா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அரசியலில் வேறுபாடு இருந்தாலும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வீரபாண்டி ராஜா இருந்ததாகவும், பிறந்தநாள் அன்றே அவர் மறைந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ராஜாவின் மரணம், வீரபாண்டியார் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments