தேசப்பிதாவாக வாழும் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் இன்று.!
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணலின் சிறப்புகளை விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்.
வாழ்க நீ எம்மான் என்று மகாகவி பாரதியால் வாழ்த்திப் பாடப்பட்டவர் காந்தியடிகள். சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவை அகிம்சை ரீதியான கொள்கையால் வழிநடத்தி தேசத்தின் விடுதலை உணர்வுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக விளங்கினார்.
மதக் கலவரங்களை நிறுத்தி இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக தண்டி யாத்திரை மேற்கொண்டார். வெள்ளையருக்கு எதிராக உப்பு சத்தியாகிரகம், உண்ணா விரதம் போன்ற பல போராட்டங்களை அறவழியில் நடத்தினார். நாடு விடுதலை பெறும் வரை ஓயாமல் முழு மூச்சாக தேசத் தொண்டாற்றினார்.
அகிம்சை, எளிமை, ஆன்மீகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற அவரது கொள்கைகள் எதிர்கால இந்தியாவின் தொலைதூர கலங்கரை விளக்குகளாக திகழ்ந்தன.
சுதேசி இயக்கம், கதர் போன்ற கிராமியப் பொருள்கள் விற்பனை காந்தியால் ஊக்கம் பெற்றன.
காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தன்னலமற்ற தொண்டால், பல தசாப்தங்களாக ஆண்ட வெள்ளையர்களிடமிருந்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றது.
வாழ்நாள் முழுவதும் அகிம்சையை நேசித்து, சத்தியத்தைக் கடைப்பிடித்ததால், கடல்கடந்து, காலம் கடந்து, இனம், மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து உலகின் வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அண்ணல் காந்தி
Comments