பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் விளையாடிய சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி...!
கரூரில் மண் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் கதறி துடித்து பரிதவித்த காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
சிவலிங்கபுரத்தை சேர்ந்த வசந்த் அவனது தம்பி மயில்வாகணன் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய மூவரும் பள்ளி விடுமுறையை ஒட்டி, ஆடு மேய்க்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, விவசாய நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்மன் அள்ளப்பட்ட15 அடி ஆழம் கொண்ட குழியில் மழைநீர் தேங்கியிருந்துள்ளது.
இதனை கண்டதும், சிறுவர்கள் மூன்று பேரும் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். மூவருக்குமே நீச்சலும் தெரியாத நிலையில் ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவர்களால் சேரும், சகதியுமாக இருந்ததால் மீண்டு வரமுடியாமல் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இதேபோன்று, அழகாபுரி கிராமத்தில் ஆடுமேய்க்கச் சென்ற லோகேஸ்வரி என்ற சிறுமி, விவசாய நிலத்தில் மண் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
Comments