லண்டனை உலுக்கிய வழக்கு... இளம்பெண் கொலையில் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

0 3000

லண்டனில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான காவல்அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

தெற்கு லண்டனில் பிரிக்ஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் சாரா எவரார்டு. 33 வயதான மார்க்கெட்டிங் நிர்வாகியான இவர், கடந்த மார்ச் மாதம் 3ந் தேதி மாலை, தனது குடியிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றுள்ளார்.

அன்று இரவு 9 மணியளவில், நண்பரை சந்தித்துவிட்டுப் புறப்பட்ட அவர், செல்போனில் பேசியவாறே வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். சற்று நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், சாராவுக்கு என்னவாயிற்றோ என அங்குமிங்கும் தேடிவிட்டு கடைசியில் போலீசில் புகார் அளித்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து செயல்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர். அதே நேரத்தில் சாரா மாயமானது குறித்து சமூகவலைதளங்களில் நண்பர் பதிவிட்டதால் இந்தத் தகவல் வேகமாகப் பரவியது.

இதனிடையே, ஒருவாரம் கடந்த நிலையில், 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கென்ட் நகருக்கு அருகே ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சாராவின் உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சாரா மாயமான இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 48 வயதான Wayne Couzens என்ற போலீஸ் அதிகாரிக்கு இதில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

சாரா தொடர்பாக கூசன்ஸிடம் விசாரணை நடத்தியபோது முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்து வந்த கூசன்ஸ், சிசிடிவி பதிவுகளைக் காட்டி விசாரணை நடத்தியபோது இளம்பெண்ணைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடத்தல், பலாத்காரம், கொலை ஆகிய 3 குற்றங்களில் ஈடுபட்டதற்காக கூசன்ஸ்சுக்கு பரோல் இல்லாத ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர், கொலை நடந்தது எப்படி என போலீசார் விவரித்தார். சாரா தனது வீட்டிற்கு நடந்து வந்தபோது பூங்கா அருகே வழிமறித்த கூசன்ஸ், போலீஸ் அடையாள அட்டையைக் காட்டி மிரட்டியுள்ளார். கொரோனா விதிமுறைகளை சாரா மீறியிருப்பதாகவும், அதனால் கைது செய்வதாகவும் கூறியுள்ளார். அவரைக் கைவிலங்கிட்டு காரில் கடத்திய கூசன்ஸ், ஆள் நடமாட்டமில்லாத தனக்கு சொந்தமான பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பலாத்காரம் செய்தபின், தன்னிடமிருந்த போலீஸ் பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சாராவின் சடலத்தை எரித்தபின் பண்ணை வீட்டின் அருகே இருந்த குளத்தில் வீசிவிட்டு எதுவும் நடக்காதவாறு திரும்பியுள்ளார்.

இருப்பினும், மிகத்திறமையான ஸ்காட்லாந்து யார்டு போலீசின் கண்களுக்கு கூசன்சின் குற்றச்செயல் தப்பவில்லை. அவர் சென்ற இடங்கள் அனைத்திலும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் தண்டனையை பெற்றுத் தந்துள்ளனர்.

ஐந்து மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், சாராவுக்கு நேர்ந்த கொடுமை தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற குற்றச்செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு போலீசார் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சாராவின் இறுதிச் சடங்கில் திரண்ட பெண்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினர். சாரா வழக்கில் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.gfx out சமூகவலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளனர். இருந்தபோதும், லண்டனில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments