மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி.. பால்கனியில் விளையாடிய போது விபரீதம்..
சென்னை மண்ணடியில் மூன்றாவது மாடியின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற முறையால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளால் மண்ணடி பகுதியில் தொடர்ந்து இது போன்ற சோக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மண்ணடி, இப்ராகிம் சாஹிப் 2-வது தெருவைச் சேர்ந்த செல்வகணி - யாசின் தம்பதி அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்றாவது குழந்தையான ஆஃபியா நேற்றிரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அவரது தாய் யாசினும் உடனிருந்துள்ளார். சிறிது நேரத்தில் சமையல் வேலையை கவனிப்பதற்காக, மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு யாசின் உள்ளே சென்றிருக்கிறார். குழந்தை விளையாடிக் கொண்டிருக்க குழந்தையின் அக்காளான சிறுமியும் விளையாட்டுத்தனமாக வீட்டிற்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், குழந்தை ஆஃபியா இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியதாகவும், எதிர்பாராதவிதமாக கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை விழுந்ததும், சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி சென்று பார்த்த நிலையில், அதற்கு அப்புறம் தான் சமையலறையில் இருந்த தாய் யாசினுக்கு குழந்தை கீழே விழுந்துவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணடி, சவுகார்பேட்டை பகுதிகளில் இதற்கு முன்பும் குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த பகுதியிலுள்ள வீடுகள் மிக நெருக்கமாகவும், நான்கு மாடி, 5 மாடி என உரிய பாதுகாப்பு இல்லாமலும் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பால்கனி தடுப்பின் உயரத்தை அதிகரித்து கட்டமைக்க வேண்டும் எனவும், குழந்தைகள் எளிதில் உள்ளே நுழைந்துவிடும் வகையில் இடைவெளி வைப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பால்கனி கம்பிகளில் குழந்தைகள் ஏற முடியாத அளவுக்கு வலை வைத்து அடைவிட்டதால் இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுக்க இயலும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
Comments