வீட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சம்பவம் செய்த வேலைக்காரி…! உஷாரா இல்லைன்னா சிக்கல்

0 62278
வீட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சம்பவம் செய்த வேலைக்காரி…! உஷாரா இல்லைன்னா சிக்கல்

பாபநாசத்தில் வீட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே எஜமானிக்கு காபியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பலே கொள்ளைக்காரியை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களது உணவு விடுதிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உணவு வாங்க வந்த பெண் ஒருவர் விஜயலட்சுமியிடம் தன்னுடைய பெயர் சாந்தா எனவும், தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்தவர் எனவும், பாபநாசம் ஆற்றங்கரை தெருவில் தங்கி கிடைக்கும் வேலைகளை செய்து வருவதாகவும் உணவு விடுதியில் வேலை வழங்குமாறும் கேட்டுள்ளார். அதற்கு விஜயலட்சுமி தன்னுடைய கணவரிடம் கேட்டுசொல்வதாக கூறியுள்ளார்.

அதன்படி கணவரிடம், தனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் தனக்கு ஒத்தாசையாக அந்தப் பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு திருநாவுக்கரசு சம்மதம் தெரிவித்து செவ்வாய்கிழமை அந்தப் பெண்ணை அழைத்து முகவரி மற்றும் அவர் குறித்த விவரங்களை சேகரித்து அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு புதன்கிழமை முதல் வேலைக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

அதன்படி புதன்கிழமை காலை சாந்தா வேலைக்கு சென்றுள்ளார். அப்போது திருநாவுக்கரசுதான் கும்பகோணத்திற்கு சென்று வருவதாக தனது மனைவி விஜயலட்சுமியிடம் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
இதையடுத்து வீட்டில் எஜமானி விஜயலட்சுமியுடன் வேலைக்காரி சாந்தா மட்டும் இருந்துள்ளார். அப்போது சாந்தா வெளியில் சென்று ஸ்பெசல் காபி பொடி வாங்கி வந்து விஜயலட்சுமிக்கு காப்பி போட்டுக் கொடுத்துள்ளார். அதனை குடித்த விஜயலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்துள்ளார். பின்னர் சாந்தா, விஜயலெட்சுமியின் அணிந்திருந்த தாலிசெயின், வளையல், மோதிரம், தோடு உள்பட 6 1/2 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.

கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த திருநாவுக்கரசு தனது மனைவி வீட்டுக்குள் சுய நினைவின்றி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு வேலைக்காரியான சாந்தாவை தேடியுள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. மேலும் மனைவி விஜயலட்சுமி அணிந்திருந்து நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதை பார்த்த திருநாவுக்கரசு வீட்டு வேலைக்காரி போல் நடித்து தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து சாந்தா நகைகளை திருடிச் சென்றிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து திருநாவுக்கரசு பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, தலைமை காவலர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது சாந்தாவிடம் சேகரித்த முகவரி உள்ளிட்ட விவரங்களை திருநாவுக்கரசு போலீசாரிடம் வழங்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்தும் போலி என தெரியவந்தது. பின்னர் திருநாவுக்கரசர் தனது செல்போனில் எடுத்த சாந்தாவின் படத்தை போலீசிடம் வழங்கினார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாபநாசம் போலீசார் அந்த மோசடி பெண்ணின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விஜயலட்சுமிக்கு அதிக அளவிலான தூக்க மாத்திரைகள் காபியில் கலந்து கொடுக்கப்பட்டதால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீட்டு வேலைக்கு அறிமுகம் இல்லா பெண்களை சேர்க்கும் முன்பாக அவர்கள் கூறும் விவரங்களை சரிபார்க்காமல் வீட்டுக்குள் அனுமதித்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments