''கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்'' துவக்கி வைத்தார் முதலமைச்சர்

0 3409

லைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மீண்டும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த போது கொண்டுவரப்பட்ட வருமுன் காப்போம் திட்டம், அதற்கு பிறகு செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தமிழகத்தின் கிராமங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் அறுவை சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்களால் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையை எளிதில் கிடைக்கச் செய்யவும், உடல் நலம் குறித்த ஆலோசனையை வழங்கி நோய்கள் வரும் முன்னேயே அதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனாவால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 62லட்சம் ரூபாய் நிவாரண நிதி உட்பட மொத்தமாக 24கோடியே 74லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து, ஆத்தூர் சென்ற முதலமைச்சர், தென்னங்குடி பாளையத்தில் 3கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இருதய சிகிச்சை கருவிகள் அமைத்தல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கருவிகள் அமைத்தல் உள்பட சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments