ரூ.15கோடிக்கு சொத்து? அரசு ஊழியரின் வீட்டில் ரெய்டு எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரா?
புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுபவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலராக இருந்த முருகானந்தம் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அரசு ஊழியரான முருகானந்தம் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், தனது மனைவி காந்திமதி பெயரிலும் 15 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணிக்கு முருகானந்தம் மிக நெருக்கமானவர் எனக் கூறப்படும் நிலையில், அதனை பயன்படுத்தி, தனது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்றுத் தந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரூராட்சி, மாநகராட்சிகளில் எல்.இ.டி. லைட் பொருத்துவது, சாலைகளில் ஒளிரும் சமிக்ஞைகள் பொருத்துவது, கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை மொத்தமாக சப்ளை செய்வது உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களை முருகானந்தம் சகோதரர்கள் முறைகேடாக பெற்று கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, முருகானந்தத்திற்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
முருகானந்தத்தின் சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி.எஸ்.பி. இமயவரம்பன் மற்றும் ஆய்வாளர் பீட்டர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார், சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Comments