சாலையை கடக்க முயன்ற போது, பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த ஆசிரியை

0 8729

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுங்குன்றத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்கமாகக் சாலையை கடக்க முயன்ற ஆசிரியை, பேருந்து திடீரென இயக்கப்பட்டபோது சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

கல்பாக்கம் அனுபுரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா தேவி என்பவர் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மாலை பள்ளியில் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது எம்.ஜி.ஆர் சிலை அருகே பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்கத்தை ஒட்டியவாறு நடந்து சென்று சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அவரை கவனிக்காத ஓட்டுநர் திடீரென பேருந்தை இயக்கவே, முன்பக்க சக்கரத்தில் சிக்கி மஞ்சுளா தேவி சம்பவ இடத்திலேயே பலியானார். 

பேருந்தின் முன்பக்கம் ஒரு பெண் நடந்து செல்வதை கூட கவனிக்காமல் ஓட்டுநர் அலட்சியமாகப் பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என சுற்றியிருந்த சிலர் குற்றம்சாட்டினர். அதேசமயம் பொதுவாக பேருந்து, லாரி போன்ற பெரிய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் இருந்து பார்த்தால் பேருந்தின் முன்பக்க கேபினை ஒட்டி மிக நெருக்கமாகக் கடந்து சென்ற ஆசிரியை, ஓட்டுனரின் பார்வையில் படாமல் போயிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே, இதுபோன்ற பெரிய வாகனங்களை கடக்கும் பாதசாரிகளும், அதனை இயக்கும் ஓட்டுனர்களும் அதீத கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments