கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் மேலும் தாமதம்

0 7428

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்குவது மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெளிநாடு செல்லும் மாணவர்கள், தொழில்துறையினர், மருத்துவப் பயணம் மேற்கொள்வோர் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத தடுப்பூசியை பல நாடுகள் ஏற்பதில்லை. அத்தகைய நாடுகள், கோவேக்சின் செலுத்தியிருந்தாலும், தடுப்பூசி செலுத்தியதாக கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

இதனால், வெளிநாடுகளுக்கு படிப்புக்காகவும், தொழில் நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் செல்பவர்கள், கோவேக்சின் செலுத்தியவர்களாக இருந்தால், இடையூறுகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திக்க நேரிடும். அனுமதி மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்குவதை உலக சுகாதார நிறுவனம் மேலும் தாமதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக மேலும் பல கேள்விகளை, உலக சுகாதார நிறுவனம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்புதலுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஏற்கெனவே வழங்கிவிட்ட நிலையில், மேலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வல்லுநர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்க வேண்டியது வழக்கமான நடைமுறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments