புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல்.. !
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரித் தமிழ்நாட்டில் ஆங்காங்கே விவசாய சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துக் கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதை எதிர்த்தும் நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விவசாய சங்கங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, ஆக்கூர், செம்பனார் கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர், இடதுசாரிக் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் முழுக் கடையடைப்பு நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் அடுத்த சிங்களாஞ்சேரி என்ற இடத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துக் கோவையில் கடையடைப்பு நடைபெற்றது. கோவை டவுன்ஹால் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
கோவை ரயில் நிலையத்தின் முன் தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன் அனைத்துத் தொழிற் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் மடத்துக்குளத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவளித்துப் புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பிட்ட தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழக அரசுப் பேருந்துகள் காவல்துறைப் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிச் சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments