புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு... பல்வேறு அமைப்புகள் ஆதரவு
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் காலாபுரகி பேருந்து நிலையத்துக்கு வெளியே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பல்வேறு அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாபின் அமிர்தசரசில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடங்களில் மோதலை தவிர்ப்பதற்காகக் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து காசிப்பூருக்குச் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அங்குப் பல மாதங்களாக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி அரியானா எல்லையான சிங்கு என்னுமிடத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியானாவின் குருசேத்திரத்தில் விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி - அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
பீகாரின் ஹாஜிப்பூர், பாட்னா ஆகிய நகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஷ்டிரிய ஜனதா தளத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பேருந்து நிலையம் அருகே விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளத்தில் முழு அடைப்புக்கு ஆளும் இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சியான காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் திருவனந்தபுரத்தில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தம்பனூர், கிழக்குக் கோட்டைப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் டெல்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் காவல்துறையினரும், துணைராணுவத்தினரும் சோதனை செய்தபின்னே அனுமதிக்கின்றனர். இதனால் அரியானா - டெல்லி எல்லையில் குருகிராமில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன
இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுவதால் நொய்டாவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
Comments