ராஜஸ்தானில் செருப்பினுள் செல்போன் மற்றும் புளூடூத் வைத்து ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் சிக்கினர்

0 3947

ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதித் தேர்வில், செருப்புக்குள் மொபைல் மற்றும் புளுடூத் கருவிகளை மறைத்துவைத்து, நவீன தொழில்நுட்பத்தில் பிட் அடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் ரீட் என்ற பெயரில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 31 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற ரீட் தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். அஜ்மீரில் ஒரு தேர்வு மையத்தில் சந்தேகத்திற்கிடமான தேர்வரை சோதனையிட்டபோது, மோசடி முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொபைல்போனையும், புளுடூத் கருவியையும் பதுக்கி வைப்பதற்கு ஏற்ப செருப்பை தயாரித்து, கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சிறிய கருவியை காதுக்குள் வைத்து, தேர்வு மையத்திற்கு வெளியே இருந்த நபர் உதவி மூலம், பிட் அடிக்க முயற்சி நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிக்கு பயன்பட்ட செருப்புகள் மிகவும் புத்திசாலித்தனமாக தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், ஹார்டுவேர் கருவிகளுடன் செருப்பின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி செருப்பு தயாரிப்பு குறுந்தொழில் போல நடந்துள்ளது என்றும், பெரிய அளவில் தேர்வு மோசடி முயற்சி நடைபெற்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். புளூடுத் மோசடி செருப்பு அணிந்து வந்த 5 தேர்வர்கள் தேர்வின் தொடக்கத்திலேயே சிக்கிய நிலையில் மற்ற மையங்களுக்கும் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு, 12 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவையும் எஸ்எம்எஸ் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட தேர்வின்போது செருப்பு, ஷூ, சாக்ஸ் அணிந்து வர தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட 5 தேர்வர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எந்த முறையில் மோசடி நடத்த திட்டமிடப்பட்டது, யார் யார் உடந்தை என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments