சாவு மணி அடிக்கும் சாயக் கழிவுகள்.. கழிவுநீராக மாறும் காவிரி நீர்..! கடும் நடவடிக்கை தேவை
ஈரோடு மாவட்டத்தில் சாய பிரிண்டிங் பட்டறையில் இருந்து சாய துணிகளை கொண்டுவந்து இரவு நேரத்தில் காவிரியில் அலசுவதால், ஆற்று நீர் சாய கழிவு நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர், விவசாயத்திற்கு பயன்படுத்தும்போது, மனித உயிருக்கு சாவு மணி அடிக்கும் சாயக் கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் நூற்றுக் கணக்கான சாய பிரிண்டிங், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகள் வாயிலாக தினமும் பல லட்சம் லிட்டர் கழிவு நீர், வாய்க்கால்களிலும், காவிரி ஆற்றிலும் கலந்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், பாசன நிலங்களும், நிலத்தடி நீரும் மாசடைந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் இரவு நேரத்தில் சாய கழிவுகள் கலந்துவிடப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 22- ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மெத்தை விரிப்பு, தலையணை உறைகள் உள்ளிட்ட சாயம் ஏற்றிய துணிகளை கொண்டு வந்து சிலர் காவிரி ஆற்றில் அலசியதை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். அதிகாரிகள் வருவதை பார்த்த சாயப் பட்டறை ஊழியர்கள் தங்களது வாகனம் மற்றும் சாயம் ஏற்றிய துணிகளை அப்படியே ஆற்றிலேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதோடு, இனிமேல் சாயம் ஏற்றிய துணிகளை காவிரி ஆற்றில் வந்து அலசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும் சனிக்கிழமை இரவு 5- க்கும் மேற்பட்ட சரக்கு வாகனத்தில் சாய பட்டறையில் இருந்து கொண்டுவரப்பட்ட சாய துணிகளை சிலர் காவிரி ஆற்றில் அலசிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆற்றில் துணிகளை அலசிக் கொண்டிருந்தவர்கள் சரக்கு வாகனங்களோடு தப்பியோடிவிட்டனர். இதில் ஒரு சரக்கு வாகனத்தை மட்டும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை நடத்தி வருகின்றனர். சாய பிரிண்டிங் தொழிலில், துணிகளுடன் பல வண்ணங்களும், வேதிப் பொருளும் கலக்கப்படுகின்றன. பல ஆயிரம் மீட்டர் நீள சாயத் துணிகளை ஆற்றில் அலசுவதால் அந்த சாயங்களும், வேதிப் பொருட்களும் ஆற்றில் கலப்பதால், அதனை பயன்படுத்துவோருக்கு பல்வேறு உடல் உபாதைகளும், புற்றுநோயும் உண்டாகும் அபாயம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
மஞ்சள் மற்றும் ஜவுளி நகரம் என்ற பெயர் பெற்ற ஈரோடு நகரம் மருத்துவமனை அதிகம் உள்ள நகரமாக மாறி வருவதாகவும், பல கோடி மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமான காவிரியில் சாயக்கழிவுகள் கலைப்பதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமாக கழிவு நீரைத் திறந்துவிட்டாலோ, அனுமதி இன்றிச் செயல்பட்டாலோ ஆலைகள் இடிக்கப்படுகின்றன. மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே அதே இடத்தில் அதே ஆலை வேறு பெயரில் செயல்படுவதாகவும், சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனையை அதிகரித்தால் மட்டுமே இந்த அவலம் மாறுவதுடன் எதிர்கால தலைமுறையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் எனவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
Comments