எஸ்.பி.பி. மறைந்து ஓராண்டு நிறைவு...காற்றில் கரைந்த கானம்
பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எஸ்.பி.பி.யின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவரை நினைவுகூரும் செய்தித்தொகுப்பு..
இளமையான குரலைத் தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆரிடம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எஸ்.பி.பியை அறிமுகப்படுத்த, கேட்டவுடனே பிடித்துப் போனது, எஸ்.பி.பி.யின் மெல்லிய மழைச்சாரல் போன்ற மயக்கும் குரல்.
எம்ஜிஆரைத் தொடர்ந்து அக்காலத்து நாயகர்கள் அனைவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒருபாடலாவது எஸ்.பி.பி பாட வேண்டும் என்று விரும்பினர்.
எம்ஜிஆர் சிவாஜியைத் தொடர்ந்து உச்சத்திற்கு வந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் எஸ்.பி.பியின் குரல் அவ்வளவு இலகுவாக பொருந்திப் போனது. இருவருக்குமான வேறுபாட்டையும் எஸ்.பி.பி தமது குரலால் அடையாளப்படுத்தியது அவருடைய திறமைக்கு சான்று....
விஜயகாந்த், சத்யராஜ், மோகன், பிரபு, கார்த்திக், விஜய், அஜித், சூர்யா, அரவிந்தசாமி போன்ற எந்த ஒரு நடிகருக்கும் எஸ்.பி.பி கொடுத்த அழுத்தமும் உச்சரிப்பும் அவர் காட்டிய குரல் வித்தியாசமும் திரையுலகின் வரலாற்றில் பொன் எழுத்தால் பதிக்கப்படும்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், உள்பட தென்னக மொழிகளிலும் இந்தியிலும் பாலசுப்பிரமணியத்தின் கொடி வானுயரப் பறந்தது....
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தானே நடித்தும் இசையமைத்தும் புதிய சாதனைகளை நிகழ்த்தினார். நிழல்கள் படத்தில் இளையராஜாவுக்கே தனது குரலை தந்த அவர் தமது இசையில் வெளியான சிகரம் படத்தில் தமக்கு ஜேசுதாசை பாட வைத்த ரசிகராகவும் விளங்கினார்.
இளையராஜா இசையில் மூச்சுவிடாமல் முழு சரணத்தையும் பாடிய எஸ்.பி.பிக்கு அந்தப் பாடல் புதிய பரிணாமம் அளித்தது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. ஒரு உருவம் மட்டுமல்ல ,ஈடு இணையில்லாத ஒரு தெய்வீகக் குரல். நெஞ்சில் என்றும் மறையாத ஒரு அடையாளம்.
உருவங்கள் மறையலாம் ஆனால் ஓராண்டுக்கு முன்பு வரை அவர் அளித்த இசையும் குரலும் உச்சரிப்பும் தமிழக மக்களின் மனங்களில் இருந்து என்றுமே மறையாது.
Comments