வங்கக் கடலில் உருவாகிறது குலாப் புயல்
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு குலாப் என பெயரிடப்பட உள்ளது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்குநோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஒடிசாவின் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டணத்திற்கு கிழக்கு-வடகிழக்கு திசையில் 590 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், மேற்குநோக்கி நகர்ந்து ஆந்திரப்பிரதேசம்-தெற்கு ஒடிசா கடலோரத்திற்கு இடையே, கலிங்கப்பட்டணம் அருகே விசாகப்பட்டினம்-கோபால்பூர் இடையே நாளை மாலை கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு ஆந்திர கடலோரம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு, அபாய வானிலையை குறிக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலுக்கு பாகிஸ்தான் நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இந்த புயல் சின்னத்தால் ஒடிசா, ஆந்திரம், தெலுங்கானா, மேற்குவங்கம் மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகள் மழைப்பொழிவைப் பெறும். இதனிடையே, புயல் உருவாகக் கூடிய வாய்ப்புள்ள காலநிலையை குறிக்கும் வகையில், பாம்பன், நாகை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Comments