ஸ்கூட்டியில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையான்னு இப்படியாப்பா பார்க்கிறது..? குபீர்..டமால்...குப்..!
திருமயம் அருகே, இரவு நேரத்தில் நடுவழியில் நின்று போன ஸ்கூட்டியில் பெட்ரோல் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக, வெளிச்சத்திற்கு தீக்குச்சியை உரசியபோது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கில் தீப்பற்றியதால் இரு சக்கர வாகனம் எரிந்து சாம்பலானது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். 55 வயதான இவர் பொன்னமராவதியில் கூலி வேலை செய்துவந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது ஸ்கூட்டியை சர்வீஸ் செய்து விட்டு வீட்டுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதி அருகே நடுவழியில் நின்றதால், வாகனத்தை ஸ்டார்ட் செய்து பார்த்துள்ளார். பெட்ரோல் டேங்கை திறந்த அவர், பெட்ரோல் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக, தீக்குச்சி ஒன்றை உரசிப் பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. தீ குபீரென்று பற்றிக்கொண்டதும், சட்டென்று விலகியதால் தியாகராஜன் காயமின்றித் தப்பினார். தகவலறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைஅணைத்தனர்.
பெட்ரோல் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தால், வாகன ஓட்டி இருசக்கர வாகனத்தை ஒருபுறமாகச் சாய்த்து பின்னர் ஸ்டார்ட் செய்தால் உடனடியாக இயங்க வாய்ப்பு இருப்பதாக கூறும் மெக்கானிக்குகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை இரு சக்கர வாகனத்தின் பக்கமே கொண்டு சென்று உரசிபார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றனர்.
Comments