உலகின் நன்மைக்காக குவாட் செயல்படுகிறது -பிரதமர் மோடி
தடுப்பூசிகள் விநியோகம், சுதந்திர வர்த்தகம் போன்றவற்றில் குவாட் நாடுகளின் கூட்டமைப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற குவாட் உச்சி மாநாடு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் நன்மைக்காக குவாட் மிகச்சிறந்த பங்களிப்பைத் தரும் என நம்பிக்கை தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் இந்தோ-பசிபிக் பிரதேசத்தில் உலகமே கொரோனாவில் இருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கும் சூழலில் குவாட் இடையிலான தடுப்பூசி விநியோகம் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மோடி தெரிவித்தார்.
அக்டோபர் மாத இறுதிக்குள் இந்தியா 80 லட்சம் டோஸ்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து குவாட் நாடுகளுக்கு விநியோகிக்க இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மதிப்பீடுகளை குவாட் நாடுகள் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பதாகவும் உலகளாவிய பாதுகாப்பு, சூழல் நடவடிக்கை, கோவிட் பணிகள், தொழில்நுட்பக் கூட்டுறவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பு நீடிப்பதாகவும் பிரதமர் மோடி தமது உரையில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரும் மாநாட்டில் உரைநிகழ்த்தினர். வாஷிங்டனில் குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி உடனடியாக அங்கிருந்து நியுயார்க் புறப்பட்டு சென்றார். இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெறும் ஐநா.பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
Comments