கொல்லப்பட்ட போது, மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை ... குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் ஜாலி... கட்சி பதவியும் கொடுத்ததால் சர்ச்சை!

0 22329
கேரளாவில் ஆதிவாசி இளைஞர் மது கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சம்சுதீன் என்பவர் ஜாமீனில் வெளிவந்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளராக நியமிக்கப்பட்டு, எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கப்பட்டார்.

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் மது கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சம்சுதீன் என்பவர் ஜாமீனில் வெளிவந்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளராக நியமிக்கப்பட்டு, எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி இந்தியாவே அதிர்ந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் முக்காலி என்ற இடத்தில் மது என்ற ஆதிவாசி இளைஞர் 16 பேர் கொண்ட கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார். முக்காலி ஜங்ஷன் பகுதியிலுள்ள கடை ஒன்றில் அரிசி திருட முயன்றதாக குற்றம் சாட்டிய அந்த கும்பல் ஈவு இரக்கமற்ற முறையில் தாக்கியதில் மது உயிரிழந்தார்.

பசிக்காக அரிசி திருடியாதாக கொல்லப்பட்ட மதுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்பதும் தெரிய வந்தது. மதுவின் உடலில் 15 இடங்களில் காயம் இருந்தது. மார்புக் கூடு உடைந்து நொறுங்கி போயும் இருந்தது. இந்தத் தகவல் வெளியாகி , கேரளா மட்டுமல்லாமல் இந்தியாவே அதிர்ந்தது.

அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொல்லப்பட்ட மது வீட்டுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார். மதுவின் சகோதரி ஒருவருக்கு கேரள போலீசில் பணி வழங்கப்பட்டது. நிதியுதவியும் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 16 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே முக்காலி பகுதியை சேர்ந்தவர்கள்தான். தற்போது, மது கொலை தொடர்பான வழக்கு மன்னார்காடு எஸ்.சி.எஸ்.டி நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே ஜாமீனில் வெளி வந்து ஊருக்குள்தான் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்

மது கொலையில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பி.எம். சம்சுதீன் என்பவரும் ஜாமீனில் வெளி வந்து அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்சுதீன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்காலி பிரிவு செயலாளராக நேற்று தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவல் வெளியே பரவியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கட்சிக்குள்ளும் எதிர்ப்பு உருவானது. மது கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு பதவி கொடுப்பதாக என்று கேள்வி எழும்பியது. இதையடுத்தே சம்சுதீன் மாற்றப்பட்டு, ஹாரீஸ் என்பர் முக்காலி பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments