3 நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..! பயன் மிக்கது எனக் கருத்து ..!
அமெரிக்காவில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகா ஆகியோருடன் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார். ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அவர்கள் பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் குவால்காம் தொலைத்தொடர்பு நிறுவனத் தலைவர் கிறிஸ்டியானோ ஆமோன், அடோப் மென்பொருள் நிறுவனத் தலைவர் சாந்தனு நாராயண், பர்ஸ்ட் சோலார் சூரியஒளி மின்னாற்றல் நிறுவனத் தலைவர் மார்க் விட்மர், ஜெனரல் அட்டாமிக்ஸ் டிரோன் தயாரிப்பு நிறுவனத் தலைவர் விவேக் லால், பிளாக்ஸ்டோன் முதலீட்டு நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சுவார்ஸ்மேன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் முதலீடு செய்வது பற்றி அவர்களிடம் பேசியதாகவும், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்து அவர்கள் பாராட்டியதாகவும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி இருவரும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தினர். இந்தோ பசிபிக் மண்டலத்தில் இரு நாடுகளின் வணிக, பொருளாதார நலன்களைப் பாதுகாப்பது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி இயக்கம், மருந்துகள் மருத்துவக் கருவிகள் வழங்கல் ஆகியவை குறித்துப் பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ளக் கூட்டாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடியுடன் பேசியபோது, இந்தோ பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்புக்காக பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றுடன் முக்கூட்டு உடன்படிக்கை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுடன் வணிகம், எரியாற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்தப் பேச்சு நடத்தியதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் யோசிகிடே சுகாவுடன் இரு நாடுகளின் வணிக, பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார். இந்தியாவின் மதிப்பு வாய்ந்த கூட்டாளிகளில் ஒன்று ஜப்பான் என்றும், இந்திய - ஜப்பான் நட்புறவு வலுப்பெற்றால் உலகின் நலனுக்கு நல்லது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Comments