மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டு அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டு அரசுக்கு நல்ல பெயரைத் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆனைப்புளி என்றும், பெருக்கமரம் என்றும் அழைக்கப்படும் 150 ஆண்டுக்காலப் பழைமை வாய்ந்த மரம் உள்ளது. 37 அடி சுற்றளவும் 65 அடி உயரமும் கொண்ட இந்த மரம் அதிகளவிலான நீரைச் சேமித்து வைப்பதால் கடும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த வகையைச் சேர்ந்த மரங்கள் இந்தியாவில் 6 இடங்களில் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் சிறப்பைக் கூறும் கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கான மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதே போல அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மையம் திறக்கப்பட உள்ளது.
உலகக் காது கேளாதோர் வாரத்தையொட்டி, தேசிய காது கேளாமை வருமுன் காத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் திட்டத்தை தொடங்கி வைத்துக் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்களுக்கு காது கருவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேருக்கு, 108 கோடி ரூபாய் செலவில் புதிய செவித்திறன் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு ஓராண்டு முறையான பயிற்சிக்குப் பின் பேசும் திறன் பெற்ற குழந்தைகளுக்கு முதன்முறையாகக் காது கேட்கும் திறனை வெளிப்படுத்தும் கருவியை சுவிட்ச் ஆன் செய்து, அவர்கள் பேசியதைக் கேட்டு முதலமைச்சர் வாழ்த்தினார்.
Comments