சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில் பழைய காசோலையைப் பயன்படுத்தி 10 கோடி ரூபாய் அபகரிக்க முயற்சி.. 10 பேர் கைது
சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியில், போபாலில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 10 கோடி ரூபாய் நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ ஆகிய மூவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கி வரும் Dileep BuildCon Ltd என்ற நிறுவனத்தின் காசோலை ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த காசோலையில் குறிப்பிடப்பட்ட 9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள ராம் சரண் என்ற நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என சமர்ப்பித்துள்ளனர்.
நெடுஞ்சாலை, மேம்பாலங்கள் மிகப்பெரிய கட்டடங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் பெயரில் வந்த காசோலை என்பதாலும், மிகப் பெரிய தொகை என்பதாலும் சந்தேகமடைந்த வங்கி ஊழியர், காசோலையின் எண்ணை வைத்து அந்த நிறுவனத்திற்கு இமெயில் மூலம் விவரங்களைக் கேட்டுள்ளார்.
அந்த காசோலை எண் 2018 -ம் ஆண்டு பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும், தற்போது போலியாக யாரோ பயன்படுத்தி இருக்கிறார்கள் எனவும் போபாலில் இருந்து அந்நிறுவனம் பதில் அளித்தது.
இதையடுத்து காசோலையை கொண்டு வந்த நபர்களுக்குத் தெரியாமல், பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ரவிகுமார் கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, அடுத்த சிறிது நேரத்தில் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் வங்கிக்கு வந்தனர்.
வங்கியில் காசோலையை மாற்ற முயன்ற பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்ததில், இந்த மோசடி அம்பலமானது. இதற்கு உடந்தையாக இருந்த அகீம் ராஜா, நாராயணன், அஜித்குமார், கோபிநாதன், செந்தில்குமார், முருகன் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போபாலில் உள்ள திலீப் பில்டுகான் கட்டுமான நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் தொடர்பில் உள்ளதால், அடிக்கடி பரிவர்த்தனை நடப்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் பெயரில் போலியான காசோலையை தயாரித்து முத்திரை, கையெழுத்து உள்ளிட்டவற்றை போலியாக பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து 10 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கி ஊழியரின் சந்தேகத்தால் புகார் அளிக்க, ஒரே நாளில் மோசடி கும்பல் 10 பேரையும் கீழ்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மோசடி கும்பல் மீது பொய்யான ஆவணங்களைப் புனைந்து மோசடி செய்வது, கூட்டுச்சதி, குற்றம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments