அமெரிக்க நிறுவன சிஇஓ.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களின் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
கொரோனா சூழலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார். நெடுந்தொலைவு அதிகநேரம் விமானப் பயணித்தில் தமது நேரத்தை வீணாக்காமல் விமானத்தில் இருந்தபோதே கோப்புகளைப் பார்வையிட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாஷிங்டன் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர்.
மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமரின் கார் அருகே வந்ததும் தேசியக் கொடியை அசைத்தும், கையசைத்தும் முழக்கமிட்டனர்.தம்மைச் சந்தித்தவர்களிடம், மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகச் சிறப்பான வரவேற்பளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.5ஜி தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும், 30 வருடங்களாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் குவால்காம் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியானோ ஆர் அமானை, பிரதமர் சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவோருக்கு அளிக்கப்படும் ஏராளமான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
5 ஜி மற்றும் பிற டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆமோன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அடோப் நிறுவனத்தின் தலைவரான, ஆந்திராவை சேர்ந்த சாந்தனு நாராயணை பிரதமர் சந்தித்து பேசினார். இந்தியாவில் இளையோருக்கு ஸ்மார்ட் கல்வியை அளிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து அவரடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அடுத்து, பர்ஸ்ட் சோலார் என்ற நிறுவனத்தின் சிஇஒ மார்க் ஆர் விட்மரை சந்தித்து, இந்தியாவில் சோலார் திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பாக பிரதமர் விவாதித்தார். பின்னர் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்தின் சிஇஒ விவேக் லாலை சந்தித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். அந்நிறுவனத்திடம் இருந்து 30 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், பிளாக்ஸ்டோன் நிறுவன சிஇஒ ஸ்டீபனையும் சந்தித்து, பிரதமர் மோடி பேசினார்.
Comments