மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அலுவலகம், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

0 2830
மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அலுவலகம், வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாசலம் மீது ஊழல் வழக்குப் பதிந்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர், சென்னையிலும் சேலம் மாவட்டத்திலும் உள்ள அவரது வீடுகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உட்பட 11 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற இந்திய வனப்பணி அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். இன்னும் நான்கு நாட்களில் இவரது பதவிக் காலம் முடியவடைய உள்ளது.

சுற்றுச்சூழல் துறைக் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாச் சான்று வழங்க வெங்கடாசலம் பெருந்தொகை லஞ்சம்பெற்றதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். அதன் அடிப்படையில் கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைமையகத்தில் வெங்கடாசலத்தின் அலுவலகத்தில் டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.

அதே போல், வேளச்சேரி செக்ரட்ரியேட் காலனியில் உள்ள வெங்கடாசலத்தின் வீட்டில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெங்கடாசலத்தின் செல்போனையும் கைப்பற்றி சோதித்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள வெங்கடாசலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் நரேந்திரன் தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது.தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கியதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியதாக புகார் கூறப்படுகிறது. லஞ்ச பணத்தில் வருமானத்திற்கு அதிகமாக வெங்கடாசலம் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments