பிரான்ஸ் ராணிக்கு நாகையில் பீதி கிளப்பிய உள்ளூர் கேடிகள்..! ரூ.1 கோடி பண்ணை வீடு அபேஸ்..!
பிரான்ஸ் நாட்டு இராணுவத்தில் பணியாற்றி இறந்துபோன நாகையைச் சேர்ந்தவரின் கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீட்டை அவரது மனைவியிடம் இருந்து அபகரித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறப்படும் அதிமுக பிரமுகர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகனைப் போல அன்பு காட்டி வளர்க்கப்பட்டவர் காலைச் சுற்றிய கருநாகம் போல் மாறிய சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் 72 வயதான இராணி. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரான இவரது கணவர் சிவானந்தம் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்ததோடு செவாலியே விருது பெற்றவர்.
தங்கள் வாரிசுகள் தமிழ் பாரம்பரியப்படி வளர வேண்டும் என்பதற்காகவும், உறவினர்களுடன் பொழுதை கழிப்பதற்காகவும் அம்பல் கிராமத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த வீட்டில் தனது கணவருக்கு மணிமண்டபம் அமைத்துள்ள ராணி, பிரான்சில் வசிக்கும் தனது மகன், மகளுடன் ஆண்டுதோறும் கணவரது நினைவுநாளில் பண்ணை வீட்டுக்கு வந்து அவருக்குத் திதி கொடுத்துச் செல்வது வழக்கம்.
கடந்த 2016ஆம் ஆண்டு கொங்கராயநல்லூரைச் சேர்ந்த சத்தியன் என்ற நபர் இராணியிடம் கார் ஓட்டுநராகச் சேர்ந்திருக்கிறான். நல்ல பிள்ளை போல நடித்து பண்ணை வீட்டை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளான். தாம் பிரான்சில் இருப்பதால் உள்ளூரில் பிரச்சனையின்றி பயன்படுத்துவதற்கு ஏதுவாக சத்தியனின் யோசனைப்படி 2 கார்களை அவன் பெயரிலேயே வாங்கியிருக்கிறார் இராணி.
இந்த நிலையில் ஒருநாள் இராணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை ஜியாவுதீன் என்ற உள்ளூர் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளான் சத்தியன். இராணிக்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாக பயமுறுத்திய ஜியாவுதீன், சத்தியனை அவருடைய பூர்வ ஜென்ம உறவினர் என்றெல்லாம் கூறி மூளைச்சலவை செய்து ராணியின் பெயரில் இருந்த அத்தனை சொத்துக்களையும் தனது பெயருக்கு அதிகார பத்திரம் எழுதி வாங்கியுள்ளான்.
பிரான்ஸ் சென்ற இராணி, கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊர் வரமுடியாமல் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளார். ஒருவழியாக கடந்த மே மாதம் சொந்த ஊர் வந்தபோது சத்தியன் குடும்பத்தோடு அங்கு குடியேறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதிகாரப் பத்திரம் என்ற பெயரில் தனது வீட்டையே அவன் பெயருக்கு எழுதி வாங்கி மோசடி செய்தியிருப்பது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது.
வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்கள், வங்கிக் கணக்கிலிருந்த 11 லட்ச ரூபாய் பணம், 22 சவரன் நகை என அத்தனையையும் சத்தியன் அள்ளிச் சுருட்டி யதாக குற்றஞ்சாட்டினார் இராணி. திருமருகலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான திருமேனி என்பவரோடு சேர்ந்துகொண்டு தனது சொத்துகள் மற்றும் கார்களை தன்னுடையது என்று கூறி தன்னை மிரட்டி விரட்டியடிக்க சத்தியன் முயல்வதாகவும் தமிழ் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள வந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக வேதனை தெரிவித்தார் ராணி.
Comments