வெடி பொருட்களுடன் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்... திடீரென வெடித்து சிதறி சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

0 3920

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, வெடி பொருட்களுடன் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறிய நிலையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெடித்துச் சிதறிய காரின் பாகங்கள் பல அடி தூரத்திற்கு சிதறிக் கிடந்த நிலையில், வீடுகளின் நிலைக்கதவு உள்ளிட்டவை உடைந்து அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. 

இடைச்சிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணன், அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். திங்கட்கிழமை இரவு வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டு வந்த பாலகிருஷ்ணன், வெடி பொருட்களுடன் காரை, வீட்டுக்கு வெளியே காலி இடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் திடீரென காரில் இருந்து அலாரம் சத்தம் கேட்கவே, ரிமோட் கீ மூலம் காரை லாக் செய்துள்ளார். லாக் செய்த சிறிது நேரத்திலேயே காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது.

மீண்டும் பயங்கர சப்தத்துடன் பாம் வெடித்தது போல சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரும், பாலகிருஷ்ணன் குடும்பத்தினரும் வெளியே வந்து பார்த்த போது, கார் வெடித்தது தெரியவந்தது. காரின் பாகங்களும், வெடிமருந்துகளும் தனித்தனியாக அந்த பகுதி முழுவதும் வெடித்து சிதறி கிடந்துள்ளது.
இதில், அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகளின் மேற்கூரைகள், சுவர்களும் சேதமடைந்தன.

பாலகிருஷ்ணனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில், சமையலறை, கழிவறை கதவுகளும் சேதமடைந்தன.

நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வெடிமருந்து நிபுணர்கள், காரில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் அனைத்தும், திருவிழாக்களில் வேடிக்கைக்காக பயன்படுத்தக் கூடியவை எனவும், காரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பட்டு வெடி விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர். அத்தோடு, மாவட்ட எஸ்.பி., ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதனிடையே, மர்ம நபர்கள் யாரோ காரில் தீ வைத்துவிட்டதாக, பாலகிருஷ்ணனின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments