நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு... நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கம்
நீட் தேர்வு முறை ஏழை- எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்புக்களை மறுப்பதாக ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை நான்காண்டுகளில் குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்த 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையில் விவரங்கள் தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைப் புறக்கணித்து தனியார் பயிற்சி நிலையங்களை ஊக்குவிப்பதால் கிராமப்புற, பழங்குடி மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகளுக்காக மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் நான்கரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதால், வசதி படைத்த மாணவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளதாக ஏ.கே.ராஜன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் , சுதந்திரத்திற்கு முந்தைய கால நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு முந்தைய ஆண்டில் பள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து விட்டதாகவும் ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் மாநிலக் கல்வியில் பயின்ற மாணவர்களின் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், அதே நேரம் சிபிஎஸ்இ மாணவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிகர்நிலை பல்கலைக்கழங்களை மாநில அரசின் அதிகாரத்தில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனியாக சட்டமியற்ற வேண்டும் எனவும் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.
Comments