கலரிங்..லைன்.. ஸ்பைக்….! புள்ளீங்கோஸுக்கு பள்ளியில் ஹேர்கட்..! மாஸ்டர் நெப்போலியன் அசத்தல்..!
நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தலையில் விதவிதமான ஹேர் ஸ்டைல் சேட்டைகளுடன் பள்ளிக்கு வந்த 80 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் பள்ளியில் வைத்தே முடிவெட்டி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைமுடியில் பூராண் விட்டு பள்ளிக்கு வந்த புள்ளிங்கோக்களை நல்ல பிள்ளைகளாக மாற்றிய மாஸ்டர் நெப்போலியன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ள மாணவர்களில் சிலர் ஜெய் ஹிந்த் பட செந்தில் போல விதவிதமான ஹேர்ஸ்டைலில் பள்ளிக்கு சென்று வருவதாக புகார் எழுந்துள்ளது
அந்தவகையில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் தாங்கள் இஷ்டம் போல் முடி வளர்த்து ஸ்டைலாக கலரிங்க் செய்தும் ,ஸ்பைக் வைத்தும், லைன் கட்டிங், பாக்ஸ் கட்டிங், மண்டையில் கோடு போடுவதும், கேராவில் பூராண் விடுவதுமாக பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனை கண்ட தலைமை ஆசிரியர் நெப்போலியன், அந்த சிகை அலங்காரங்களை ஒழுக்கமாக திருத்திக் கொள்ளவும், பள்ளி மாணவர்கள் போல சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்ளவும் ஒருவாரகால அவகாசம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் பள்ளி விடுமுறையால் புள்ளீங்கோ போல ஹேர் ஸ்டைலுக்கு மாறியவர்கள் தங்கள் ஹேர்ஸ்டைலை திருத்திக் கொள்வதாக தெரியவில்லை. கடை விடுமுறை என்பதால் முடியை சரிசெய்ய இயலவில்லை என்று வழக்கம் போல சாக்கு போக்கு கூறியுள்ளனர் அந்த புள்ளிங்கோ மாணவர்கள்
இதையடுத்து அதிரடி முடிவெடுத்த தலைமை ஆசிரியர் நெப்போலியன், முடித்திருத்தம் செய்யும் இருவரை பள்ளிக்கே நேரடியாக வரவழைத்து தன் சொந்த செலவில் மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய உத்தரவிட்டார். அவரது முன்னிலையில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் முடிவெட்டி ஒழுங்கு படுத்தப்பட்டது. பள்ளிக்கூடம் இல்லை என்பதால் ஒழுக்கம் மறந்த 80 மாணவர்களை ஒருவர் பின் ஒருவராக, ஒரே இடத்தில் அமரவைத்து ஒழுக்கமாக ஹேர் கட் செய்ய வைத்ததுடன் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தக்க அறிவுரையும் வழங்கினார்.
இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 900 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியர் நெப்போலியன் மிகுந்த அக்கறையுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 80 மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்து ஒழுங்கு படுத்திய நிலையில், அந்த மணவர்களின் பெற்றோரை போனில் தொடர்புகொண்டு மாணவர்களை ஒழுக்கத்தோடும், கண்டிப்போடும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
தண்டனையாக இல்லாமல் , தவறை திருத்தும் வகையில் பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் நெப்போலியன் போன்று கண்டிப்புடன் இருந்தால் தறிகெட்டு சுற்றும் புள்ளிங்கோ மாணவர்களை நல்வழிப்படுத்த இயலும்..! என்பதே பெற்றோரின் கருத்தாக உள்ளது.
Comments