நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மேலும் மேலும் அவகாசம் கேட்பதா? உச்சநீதிமன்றம் கண்டிப்பு..!
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலை நடத்த முடியும் என்றால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் அவகாசம் வழங்க முடியாது என கண்டிப்புடன் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை உச்சநீதிமன்றம் அவகாசத்தை நீட்டித்திருந்த நிலையில், மூன்றாவது முறையாக மேலும் 7 மாதங்கள் அவகாசம் கேட்டு, மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி ரமணா, உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஏன் செயல்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏற்கெனவே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்று வினவிய உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டது.
குறைந்தது எத்தனை நாட்களில் தேர்தலை நடத்த முடியும் என்பது தொடர்பாக 2 நாட்களில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், 7 மாதகாலம் அவகாசம் கேட்பதாகத் தெரிவித்த மாநில தேர்தல் ஆணையம், குறைந்தது 4 மாதகாலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Comments