அரசுப் பள்ளியில் பயின்று சிறப்பு இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசுப் பள்ளிகளில் பயின்று, 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு மூலம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் கலந்தாய்வு கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, பொறியியல் படிப்புகளில் 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், 15 ஆயிரத்து 660 அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதல் கட்டமாக, 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேரும் 50 மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணை வழங்கி துவக்கி வைத்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை அரசே ஏற்பது ஆகியவற்றின் மூலம் தங்கள் கனவு, நனவாகியிருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Comments