மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்
மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுப்பது உள்ளிட்டவற்றையும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் முன்புறத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து போராட்டம் நடைபெற்றது.
சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய அரசைக் கண்டித்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே திமுகவினரும், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன், எம்பி எஸ்ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இல்லத்துக்கு முன் கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருவள்ளூரில் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் திமுகவின் கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், அசோக் நகரிலுள்ள தனது கட்சி அலுவலகம் முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையிலுள்ள திமுக அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Comments