2 ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியாவில் தயாரிக்கத் திட்டம்.. விண்வெளித் துறை தகவல்
ஜிஎஸ்எல்வி மார்க் 3, எஸ்எஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியத் தொழில்நிறுவனங்களிடம் தயாரித்துப் பெறுவதற்கு விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை முழுவதும் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை 3 நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.
எச்ஏஎல் - எல் அண்டு டி, பிஇஎல் - அதானி - பிஇஎம்எல், பெல் ஆகியன இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக நியூஸ்பேஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவற்றைப் பரிசீலித்து ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடைமுறை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும், தேர்வாகும் நிறுவனத்துக்கு 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டைத் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார். இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டு வரும் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் வெற்றிபெற்று விட்டால், தொழில் நிறுவனங்களிடம் ராக்கெட் தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விண்வெளித் துறை தொடர்பான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்யும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Comments