சூடுவைத்து சித்ரவதை... 5 வயது சிறுவனை கொன்ற கொடூர பெண்

0 5578
சூடுவைத்து சித்ரவதை... 5 வயது சிறுவனை கொன்ற கொடூர பெண்

சென்னை அருகே 5 வயது சிறுவனை, நான்கு மாதமாக சூடுவைத்து, அடித்து துன்புறுத்தி, சகோதரியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன், சூசைமேரி தம்பதிக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தியாகராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், சூசைமேரியும் கூலி வேலைக்கு சென்று வருவதால் தனது 5 வயது மகனை பார்த்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.

இதனால் பெருங்களத்தூர் பீர்க்கன்கரணையில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு நான்கு மாதத்துக்கு முன்பு தனது மகன் ஆபேலை அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சிறுவன் ஆபேல் திடீரென மயக்கம் அடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் அடிபட்ட காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் சிறுவனை கவனித்து வந்த சூசைமேரியின் சகோதரி மகள் மேரியிடம் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு 4 மாதங்களாக நடந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மேரியின் தாய் இறந்ததில் இருந்து அதிகளவில் கோபப்படும் குணம் கொண்ட மேரி, சுட்டித்தனமாக இருந்த தனது சித்தி மகன் ஆபேலை கண்டிப்பதாக கூறி, கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் யாருமில்லாத போது, அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியிருக்கிறார்.

இதை யாரிடமாவது கூறினால் மாடியில் இருந்து தள்ளிவிடுவேன் என்று மிரட்டியதால் சிறுவன் யாரிடமும் இதுகுறித்து சொல்லவில்லை என்று கூறப்படுகின்றது. கடந்த 16ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில், மேரி சிறுவனை அடித்தபோது வலி தாங்காமல் அழுததால் சுவற்றின் மீது தள்ளியதில், மயங்கி விழுந்த சிறுவன் தலையில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து மேரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவன் என்றும் பாராமல், தனது அடங்கா கோபத்திற்கு சின்னஞ்சிறுவனை கல்நெஞ்ச பெண் பலியாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அதிக கோபம் கொள்பவர்கள் நல்ல மனநல மருத்துவரை பார்த்து உரிய கவுன்சிலிங் பெற்றுக் கொள்ள தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments